thevaram

திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்கள்




அரசன் அழைத்தபோது திருநாவுக்கரசர் அழைப்பை மறுத்துரைத்த திருப்பதிகம் - மறுமாற்றத் திருத்தாண்டகம்




 
 
                           திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்கள்
		   
  திருமுறை - ஆறாம் திருமுறை - பொதுப் பதிகம்
  பண் - திருத்தாண்டகம்
          
      
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
	நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
	இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
	சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
	கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.  1 


அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்
	அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்
புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி
	உடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்
	இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோந்
துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ்
	சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே.  2 


வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்
	மாதேவா மாதேவா என்று வாழ்த்தி
நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்
	நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோங்
காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்
	கன்மனமே நன்மனமாக் கரையப் பெற்றோம்
பாராண்டு பகடேறி வருவார் சொல்லும்
	பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே.  3 


உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்
	உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே
செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்
	நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்
நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்
	நமச்சிவா யஞ்சொல்ல வல்லோம் நாவாற்
சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட
	சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே.  4 


என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
	இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோஞ்
	சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
	உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
	புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.  5 


மூவுருவின் முதலுருவாய் இருநான் கான
	மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்துஞ்
	செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே
	நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
காவலரே யேவி விடுத்தா ரேனுங்
	கடவமலோங் கடுமையொடு களவற் றோமே.  6 


நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
	நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி
	அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
	ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
	பேசுவன பேசுதுமோ பிழையற் றோமே.  7 


ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் றன்னை
	இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க
தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்
	சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற
நேசனை நித்தலும் நினையப் பெற்றோம்
	நின்றுண்பா ரெம்மை நினையச் சொன்ன
வாசக மெல்லாம் மறந்தோ மன்றே
	வந்தீரார் மன்னவனா வான்றா னாரே.  8 


சடையுடையான் சங்கக் குழையோர் காதன்
	சாம்பலும் பாம்பு மணிந்த மேனி
விடையுடையான் வேங்கை யதள்மே லாடை
	வெள்ளிபோற் புள்ளியுழை மான்றோல் சார்ந்த
உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்
	உம்மோடு மற்று முளராய் நின்ற
படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்
	பாசமற வீசும் படியோம் நாமே.  9 


நாவார நம்பனையே பாடப் பெற்றோம்
	நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
ஆவாவென் றெமையாள்வான் அமரர் நாதன்
	அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை
	சேர்ந்திருந்தான் தென்றிசைக்கோன் றானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலுங்
	குணமாகக் கொள்ளோமெண் குணத்து ளோமே.  10