thevaram

திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்கள்




அரசன் திருநாவுக்கரசரை சுண்ணாம்பு காளவாயில் இட்டபோது போது நிகழ்ந்த அற்புதத்தை கூறும் பதிகம்




 
           
		   திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்கள்

   திருமுறை - ஐந்தாம் திருமுறை - பொதுபதிகம்
   பண் - திருக்குறுந்தொகை -

      
மாசில் வீணையும்
  மாலை மதியமும்
வீசு தென்றலும்
  வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை
  பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை
  இணையடி நீழலே.  1 


நமச்சி வாயவே
  ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே
  நானறி விச்சையும்
நமச்சி வாயவே
  நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே
  நன்னெறி காட்டுமே.  2 


ஆளா காராளா
  னாரை அடைந்துய்யார்
மீளா வாட்செய்து
  மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை
  யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண்
  ணாகிக் கழிவரே.  3 


நடலை வாழ்வுகொண்
  டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது
  சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு
  துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந்
  தூர்முனி பண்டமே.  4 


பூக்கைக் கொண்டரன்
  பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன்
  நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை
  தேடி அலமந்து
காக்கைக் கேயிரை
  யாகிக் கழிவரே.  5 


குறிக ளுமடை
  யாளமுங் கோயிலும்
நெறிக ளுமவர்
  நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம்
  ஆரணம் ஓதிலும்
பொறியி லீர்மன
  மென்கொல் புகாததே.  6 


வாழ்த்த வாயும்
  நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந்
  தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர்
  தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை
  யேன்நெடுங் காலமே.  7 


எழுது பாவைநல்
  லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின்
  றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி
  யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி
  தென்படு கின்றதே.  8 


நெக்கு நெக்கு
  நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன்
  னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர்
  பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்ப
  ரவர்தம்மை நாணியே.  9 


விறகிற் றீயினன்
  பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன்
  மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்
  டுணர்வு கயிற்றினான்
முறுக வாங்கிக்
  கடையமுன் னிற்குமே.  10