thevaram

திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்கள்




திருநாவுக்கரசருக்கு சமணர்கள் நஞ்சு கலந்த பால் சோறு கொடுத்த போது நிகழ்ந்த அற்புதத்தை கூறும் திருப்பதிகம்


 
                       
					   திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்கள்
					   
  திருமுறை - நான்காம் திருமுறை
  நாடு - சோழநாடு காவிரித் தென்கரை
  தலம் - நனிபள்ளி
  பண் - திருநேரிசை
      
முற்றுணை யாயி னானை 
  மூவர்க்கு முதல்வன் றன்னைச்
சொற்றுணை ஆயி னானைச் 
  சோதியை ஆத ரித்து
உற்றுணர்ந் துருகி யூறி 
  உள்கசி வுடைய வர்க்கு
நற்றுணை யாவர் போலும் 
  நனிபள்ளி அடிக ளாரே.  1 


புலர்ந்தகால் பூவும் நீருங் 
  கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயின் நூலால் 
  வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை அரைய னாக்கிச் 
  சீர்மைகள் அருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த 
  நனிபள்ளி அடிக ளாரே.  2 


எண்பதும் பத்தும் ஆறு 
  மென்னுளே இருந்து மன்னிக்
கண்பழக் கொன்று மின்றிக் 
  கலக்கநான் அலக்க ழிந்தேன்
செண்பகந் திகழும் புன்னை 
  செழுந்திரட் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த 
  நனிபள்ளி அடிக ளாரே.  3 


பண்ணினார் பாட லாகிப் 
  பழத்தினில் இரத மாகிக்
கண்ணினார் பார்வை யாகிக் 
  கருத்தொடு கற்ப மாகி
எண்ணினார் எண்ண மாகி 
  ஏழுல கனைத்து மாகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் 
  நனிபள்ளி அடிக ளாரே.  4 


துஞ்சிருள் காலை மாலை 
  தொடர்ச்சியை மறந் திராதே
அஞ்செழுத் தோதின் நாளும் 
  அரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பால்சோ றாக்கி 
  வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார் 
  நனிபள்ளி அடிக ளாரே.  5 


செம்மலர்க் கமலத் தோனுந் 
  திருமுடி காண மாட்டான்
அம்மலர்ப் பாதங் காண்பான் 
  ஆழியான் அகழ்ந்துங் காணான்
நின்மலன் என்றங் கேத்தும் 
  நினைப்பினை அருளி நாளும்
நம்மலம் அறுப்பர் போலும் 
  நனிபள்ளி அடிக ளாரே.  6 


அரவத்தால் வரையைச் சுற்றி 
  அமரரோ டசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும் 
  ஆலநஞ் சமுதா வுண்டார்
விரவித்தம் அடிய ராகி 
  வீடிலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ வொட்டார் 
  நனிபள்ளி அடிக ளாரே.  7 


மண்ணுளே திரியும் போது 
  வருவன பலவுங் குற்றம்
புண்ணுளே புரைபு ரையன் 
  புழுப்பொதி பொள்ள லாக்கை
----- ----- ----- -----

இப்பதிகத்தில் 8-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் போயின.  8 


இப்பதிகத்தில் 9-ம்செய்யுள் மறைந்து போயிற்று.  9 


பத்துமோர் இரட்டி தோளான் 
  பாரித்து மலையெ டுக்கப்
பத்துமோர் இரட்டி தோள்கள் 
  படருடம் படர வூன்றிப்
பத்துவாய் கீதம் பாடப் 
  பரிந்தவற் கருள்கொ டுத்தார்
பத்தர்தாம் பரவி யேத்தும் 
  நனிபள்ளிப் பரம னாரே.