thevaram

திருநாவுக்கரசர் தேவாரம்




திருநாவுக்கரசர் முக்தி திருப்பதிகம்




 
  
                      திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்கள்

  திருமுறை - ஆறாம் திருமுறை
  நாடு - சோழநாடு காவிரித் தென்கரை
  தலம் - புகலூர்
  பண் - திருத்தாண்டகம்
  
எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
	எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்
கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்
	கழலடியே கைதொழுது காணி னல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
	ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
	பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  1 


அங்கமே பூண்டாய் அனலா டினாய்
	ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்
பங்கமொன் றில்லாத படர்ச டையினாய்
	பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்
சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்
	சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்
	திருப்புகலூர் மேவிய தேவ தேவே.  2 


பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய்
	பளிக்குக் குழையினாய் பண்ணார் இன்சொல்
மைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய்
	மான்மறிகை யேந்தினாய் வஞ்சக் கள்வர்
ஐவரையும் என்மேற் றரவ றுத்தாய்
	அவர்வேண்டுங் காரியமிங் காவ தில்லை
பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்
	பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  3 


தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச்
	சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே
மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய்
	மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் கென்றும்
அருளாகி ஆதியாய் வேத மாகி
	அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்
பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்
	பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  4 


நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
	நீங்காமை வைத்துகந்த நீதி யானே
பாரேறு படுதலையிற் பலிகொள் வானே
	பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா
காரேறு முகிலனைய கண்டத் தானே
	கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த
போரேறே உன்னடிக்கே போது கின்றேன்
	பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  5 


விரிசடையாய் வேதியனே வேத கீதா
	விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய்
திரிபுரங்க ளெரிசெய்த தேவ தேவே
	திருவாரூர்த் திருமூலட் டான மேயாய்
மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்
	வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தா யென்றும்
புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்
	பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  6 


தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்
	திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று
நாவார்ந்த மறைபாடி நட்ட மாடி
	நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்
	கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்
பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்
	பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  7 


நெய்யாடி நின்மலனே நீல கண்டா
	நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே
மையாடு கண்மடவாள் பாகத் தானே
	மான்றோ லுடையாய் மகிழ்ந்து நின்றாய்
கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை
	கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்
	பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  8 


துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்
	துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்
தன்னனையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ்
	சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே
அன்ன நடைமடவாள் பாகத் தானே
	அக்காரம் பூண்டானே ஆதி யானே
பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்
	பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  9 


ஒருவனையு மல்லா துணரா துள்ளம்
	உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மே லேவி
	இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்
கருவரை சூழ்கானல் இலங்கை வேந்தன்
	கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற
பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்
	பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.  10