thevaram

திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்கள்




வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது




 
       
 	           திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்கள்

  திருமுறை - ஐந்தாம் திருமுறை
  நாடு - சோழநாடு காவிரித் தென்கரை
  தலம் - மறைக்காடு
  பண் - திருக்குறுந்தொகை
      
பண்ணி னேர்மொழி
  யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ்
  செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக்
  காணக் கதவினைத்
திண்ண மாகத்
  திறந்தருள் செய்ம்மினே.  1 


ஈண்டு செஞ்சடை
  யாகத்துள் ஈசரோ
மூண்ட கார்முகி
  லின்முறிக் கண்டரோ
ஆண்டு கொண்டநீ
  ரேயருள் செய்திடும்
நீண்ட மாக்கத
  வின்வலி நீக்குமே.  2 


அட்ட மூர்த்திய
  தாகிய அப்பரோ
துட்டர் வான்புரஞ்
  சுட்ட சுவண்டரோ
பட்டங் கட்டிய
  சென்னிப் பரமரோ
சட்ட விக்கத
  வந்திறப் பிம்மினே.  3 


அரிய நான்மறை
  யோதிய நாவரோ
பெரிய வான்புரஞ்
  சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண
  ஆடை விருத்தரோ
பெரிய வான்கத
  வம்பிரி விக்கவே.  4 


மலையில் நீடிருக்
  கும்மறைக் காடரோ
கலைகள் வந்திறைஞ்
  சுங்கழ லேத்தரோ
விலையில் மாமணி
  வண்ண வுருவரோ
தொலைவி லாக்கத
  வந்துணை நீக்குமே.  5 


பூக்குந் தாழை
  புறணி அருகெலாம்
ஆக்குந் தண்பொழில்
  சூழ்மறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி
  யீர்அடி கேள்உமை
நோக்கிக் காணக்
  கதவைத் திறவுமே.  6 


வெந்த வெண்பொடிப்
  பூசும் விகிர்தரோ
அந்த மில்லி
  அணிமறைக் காடரோ
எந்தை நீயடி
  யார்வந் திறைஞ்சிட
இந்த மாக்கத
  வம்பிணி நீக்குமே.  7 


ஆறு சூடும்
  அணிமறைக் காடரோ
கூறு மாதுமைக்
  கீந்த குழகரோ
ஏற தேறிய
  எம்பெரு மானிந்த
மாறி லாக்கத
  வம்வலி நீக்குமே.  8 


சுண்ண வெண்பொடிப்
  பூசுஞ் சுவண்டரோ
பண்ணி யேறுகந்
  தேறும் பரமரோ
அண்ண லாதி
  அணிமறைக் காடரோ
திண்ண மாக்கத
  வந்திறப் பிம்மினே.  9 


விண்ணு ளார்விரும்
  பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங்
  கும்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக்
  காணக் கதவினைத்
திண்ண மாகத்
  திறந்தருள் செய்ம்மினே.  10 


அரக்க னைவிர
  லாலடர்த் திட்டநீர்
இரக்க மொன்றிலீர்
  எம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள்
  சூழ்மறைக் காடரோ
சரக்க விக்கத
  வந்திறப் பிம்மினே. 10