தைப்பொங்கல் சிறப்பு |thai pongal festival tamil nadu
பொங்கல் பண்டிகை வரலாறு
தைமாதப் பிறப்பன்று சூரியன் தனுர் ராசியிலிருந்து மகரத்திலே சூரியன் பிரவேசமாகு நாள் தைப்பிறப்பு எனப்படும். ஆதலின் மகரசங்கராந்தி எனவும் இந்நாள் அழைக்கப்படும். இந்நான் சூரியன் வடக்கு நோக்கிச் சஞ்சரிக்க ஆரம்பமாகும் நாள்.
பொங்கல் என்றால் என்ன?
சங்கராந்தி அல்லது பொங்கல் பண்டிகை – உழவர்கள் வருடம் முழுவதும் பாடுபட்டு, அறுவடை முடித்து, புதுதானியங்களை உபயோகித்து புதுப்பானையில் பொங்கல் செய்வார்கள். பொங்கலன்று சூரியன் தென் திசையிலிருந்து, வடதிசை திரும்புவதாக ஐதிகம், சங்கராந்தி அன்று தகப்பனார் இல்லாதவர் புண்ணியகால தர்ப்பணம் செய்ய வேண்டும். மாதம் பிறந்த பின்தான் பொங்கல் பானை வைக்க வேண்டும். பொங்கல் வைக்கும் பாத்திரத்தைச் சுற்றிலும் சுண்ணாம்பு தடவி சூரியன், சந்திரன் போட்டு குங்குமம் பொட்டு இட வேண்டும். பாத்திரத்திற்கு இலையுடன் கூடிய மஞ்சள் கொத்து கட்ட வேண்டும். சமையல் முதலிய நைவேத்திய சாதனங்களையும் வைத்து சூரிய நாராயண பூஜை செய்து, ஒரு தலைவாழை இலையில் செய்திருக்கும் எல்லாவற்றிலும் சிறிது போட்டு பிசைந்து, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு நான்கு பாகத்திலும் சிறிது போட்டு, பொங்கலோ, பொங்கல் என்று கூற வேண்டும்.
தைப்பொங்கல் சிறப்பு
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். தைப்பொங்கல் மக்களால் வாழையடி வாழையாகக் கொண்டாடப்படும் ஒரு திருநாளாகும் சூரிய பொங்கலெனவும் இதனைக் கூறுவர். பொங்கல் பெருநாள் நாடு மகிழும் நன்னாள். நாட்டு மக்கள் மறுமலர்ச்சியடையும் பொன்னாள். உள்ளம் பொங்கப் பொங்கல் பொங்கும் தங்கத் திருநாள். அறப்பண்பின் அமைதியிலே – இயற்கையின் எழுச்சியிலே எழுந்த இன்பத் திருநாள் புத்தாண்டைப் பருவ மாறுதலாக வைத்து வரையறுத்தனர் நம் முன்னோர். தென் திசையிலிருந்து வடதிசைக்குச் சூரியன் மாறுவதை வாழ்விலே ஒரு திசை மாற்றமாகப் புதுவாழ்வாகக் கொண்டனர்.