விரதங்கள்

வரலட்சுமி நோன்பு பூஜை | varalakshmi nombu in tamil

வரலட்சுமி நோன்பு

மகாலட்சுமி பாற்கடலில் தோன்றிய நாள்தான் வரலட்சுமி நோன்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஒவ்வொரு மணமான பெண்ணும் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. குடும்ப நலனுக்கு முக்கியமாக செய்ய வேண்டும். இதைச் செய்தால் சுமங்கலித்துவம் வரும் என்பர். கன்னிப் பெண்கள் செய்தால் குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும் என்பார்கள். வரத்தை கொடுப்பவள் வரலட்சுமி. இந்நோன்பை அனுஷ்டித்தவர்கள் அடைந்த பாக்கியங்களைப் பற்றி பத்ம புராணத்தில் கூறி உள்ளது. இதை அனுஷ்டிக்காத ராணி ஏழையானாள். அனுஷ்டித்தவன் சக்ரவர்த்தினி ஆனான் என்று ஒரு கதையில் இருக்கிறது.

வரலட்சுமி நோன்பு பூஜை செய்யும் முறை

பூஜை செய்யும் இடத்தை வெள்ளை அடித்து, அவரவர்கள் வீட்டு வழக்கப்படி, அம்மன் கலசத்தை தாமிரச் செம்பிலோ வெள்ளிச் செம்பிலோ வைக்கலாம். கலசம் வைப்பதற்கென்று சில வீடுகளில் மண்டபம் தனியாகச் செய்து வைத்திருப்பார்கள். செம்பின் கழுத்தில், கருகமணி, முத்து பவழ மாலைகளைப் போடலாம். கலச செம்பின் கீழே ஒரு கிண்ணத்தில் (பேலா) சிறிது அரிசியைப் போட்டு அதன் மேல் அக்கலச செம்பை வைத்து அதற்குப் பாவாடையோ, புடவையோ அழகாக அணிவிக்க வேண்டும்.
தேங்காயின்மேல் பிச்சோலை கருகமணி (காதோலை கருகமணி) யையும் (கடையில் கிடைக்கும்) புதிய ரவிக்கைத் துணியை மாலை போல் அணிவிக்க வேண்டும்.கலசத்தை, மாக்கோலம், செம்மண் இட்ட ஒரு பலகையில் ஒரு தலைவாழை இலையைப்
.போட்டு அதன் நுனிப்பாகம் வடக்குப்புறமாக வைத்து, அதில் சிறிது அரிசியைப் பரப்பிஅதன் மேல் செம்பை வைக்க வேண்டும். அம்மனை கிழக்கு முகமாக பார்க்கும்படி வைத்து நாம் வலது பக்கம் உட்கார்ந்தபடி பூஜை செய்ய வேண்டும். நோன்பு, சரட்டில் ஒன்பது முடிகள் இட்டு நடுவில் சிறிது புஷ்பத்தைத் தொடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வாயிற்படியின் அருகில் ஒரு சிறிய மாக்கோலம் போட்டு செம்மண் இட்டு, அங்கு அம்மனை வைந்து முதலில் பிள்ளையார் பூஜை செய்த பின் மண்டபத்திற்கு பாட்டுப்பாடி அம்மனை அழைத்துவர வேண்டும். லக்ஷ்மி என் வீட்டிற்கு வரவேண்டும் என்று கூறி அழைத்து வரவேண்டும்.

சில வீடுகளில் புதிதாக கல்யாணம் ஆனவர்கள் முதல் வருஷம் தலை நோன்பு என்று கொண்டாடுவார்கள். அம்மனை அழைத்து வந்து, நாமே பூஜை செய்யலாம். அல்லது சாஸ்திரிகளைக் கொண்டும் பூஜை செய்வித்துக் கொள்ளலாம், சௌகரியம் இல்லாதவர்கள் பூஜை புத்தகத்தை வைத்துக் கொண்டு பூஜையைச் செய்யலாம்.

பூஜை முடிந்தபின் சரட்டை வலது கையில் கட்டிக்கொண்டு அம்மனுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். அன்று மாலை அம்மனுக்கு பிரீதியாக ஆரத்தி கரைத்து வைத்து, தீபம் ஏற்றிய உடன், சில சுமங்கலிகளுக்கு வெற்றிலைப் பாக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டும். அடுத்த நாள் காலை புனர்பூஜை செய்ய வேண்டும். புனர்பூஜை மந்திரங்கள் பூஜை புஸ்தகத்தில் இருக்கும். நைவேத்தியத்திற்கு பழங்கள் வைக்கலாம். அன்று மாலை விளக்கு ஏற்றி வைத்து ஆரத்தி எடுக்க வேண்டும். சுண்டல் நைவேத்தியம் செய்ய வேண்டும். கலசத்து அம்மனைத் தொட்டு சற்று நகர்த்தி விட வேண்டும். அதற்கு முன் அம்மன்பேரில் தெரிந்த பாட்டுக்களையும், சுலோகங்களையும் சொல்லலாம். இரவு படுக்குமுன் கலசத்தை எடுத்து அரிசி பாத்திரத்தில் வைக்க வேண்டும். அம்மன் இருக்கும் இடம் அக்ஷ்யமாக இருக்கும் என்பது ஐதிகம். கலசத்து தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக் கிழமை உடைத்து பாயசம் செய்ய வேண்டும்.

வரலட்சுமி நோன்பின் மகத்துவம்

வரலட்சுமி நோன்பின் மகத்துவத்திற்கு ஒரு புராணக் கதையும் உண்டு. முன்பொரு சமயம் சித்திர நேமி என்ற தேவகுலப்பெண் நீதிபதியாக இருந்தாள். தேவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒரு தடவை அவள் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கியதால், அன்னை பார்வதி அந்த சித்திர நேமியை குஷ்டரோகியாகும்படி சாபமிட்டாள். சித்திரநேமியும் தன் தவறை உணர்ந்து இந்த சாபத்திற்கு விமோசனம் பெற அன்னை பார்வதி தேவியிடம் மன்றாடினாள். மனமிறங்கிய பார்வதி தேவி சொன்னபடி வரலக்ஷ்மி நோன்பிருந்து சாபவிமோசனம் பெற்றாள். மேலும் புண்ணிய நதிகளில் நீராடுவதும் வரலட்சுமி நோன்பு இருப்பதற்கு சமமாகும். அத்துடன் குடும்பத்தில் மாமனார், மாமியாருக்கு சிறப்பான பணிவிடை செய்து வந்தாலும் வரலக்ஷ்மி நோன்பு இருந்ததின் பலன் கிடைக்கும்.

வரலட்சுமி நோன்பின் பலன்

வரலக்ஷ்மி நோன்பு இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். எட்டுவித செல்வங்களுடன் சிறப்பான வாழ்வும் அமையும். கன்னிப்பெண்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் திருமணம் நிச்சயமாகும். வாலக்ஷ்மி பூஜை செய்யும் போது அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். இதைச் செய்ய வசதியில்லாதவர்கள் அருகாமையில் பூஜை செய்யும் இடத்திற்கு சென்று பூஜைத் திரவியங்களை கொடுத்து, பூஜையை முடித்துக் கொண்டு சரடு கட்டிக்கொள்ள வேண்டும். பூஜையை முதல் வெள்ளிக்கிழமை செய்ய சௌகரியம் இல்லாவிடில், மறு வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும். ஒரு முறை செய்ய ஆரம்பித்துவிட்டால் ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *