கார்த்திகை சோமவாரம் விரதம்| somavaram vratham
கார்த்திகை சோமவாரம் விரதம்
திங்கட்கிழமை சோமவாரம் எனப்படும். ஆகவே சோமவார விரதம் என பெயர் பெற்றது. இவ்விரதத்தை போல சிவபெருமானுக்கு பிரீதியான விரதம் வேறொன்றும் இல்லை. அதிலும் கார்த்திகை மாத சோமவாரம் மிகவும் சிறந்ததாகும்
கார்த்திகை சோமவாரம் வரலாறு
முன்னொரு காலத்தில் சந்திரன் சிவபெருமானை பிரார்த்தித்து முறையாக சோமவார விரதம் இருந்து எம்பெருமானின் சடாபாரத்தில் (திருசடாமுடியாக) வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றார். இதைக்கண்ட பார்வதி தேவி சிவபெருமானிடம் சோமவார விரத முறையை அருள விண்ணப்பித்தல். எம்பெருமான் சோமவார தினத்தில் உபவாசம் இருந்து சிவநாமங்களை ஜபித்து இயன்றவரை தான தருமங்கள் செய்து நற்குணம் அமைந்த வேதியனையும், அவன் மனைவியையும் அழைத்து அவர்களையே சிவனாகவும், உமையாகவும் பாவித்து விருந்து உபசரித்து தான தருமங்கள் செய்ய என்று கூறினார்.
இந்த விரதத்தை வசிஷ்டர், சேமசன்மர், தன்மமிதியர் போன்றோர் அனுஷ்டித்து பெருஞ்செல்வம், நற்கதி, புத்திரபேறு போன்றவற்றை அடைந்து இனிது வாழ்ந்தனர். சிவபெருமானுக்குரிய விசேஷ நாளாகிய இந்தாளில் விரதம் இருந்து பல பேறுகளை அடைந்து வாழ்வோமாக.
சிவாலயதில் சோமவாரம்
கார்த்திகை சோமவார தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு திருமஞ்சனமும், சங்காபிஷேகமும், இடப வாகனத்தில் வீதியுலா உற்சவமும் நடைபெறும். இத்தினத்தில் சிவாலயம் சென்று வழிபடுதல் மிகவும் சிறந்ததாகும். இந்த மாதத்தில் வரும் நான்கு சோமவார தினத்தில் அவசியம் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். கார்த்திகை மாதத்தில் ஐந்து சோமவாரம் வருமேயானால் ஐந்தாவது சோமவாரம் சிவபெருமானை வழிபட மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது