ஹனுமத் ஜயந்தி | hanuman jayanti in tamil
ஹனுமத் ஜயந்தி
ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஜயந்தி, ஜயந்திகளுக்கெல்லாம் ஜயந்தி, அந்த ஜயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்களம் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். குடும்பத்தில் இன்பம் பெருகும். துன்பம் விலகும், மார்கழி அமாவாசையன்று ஹநுமத் ஜயந்தி கொண்டாடப்படுகின்றது ஸ்ரீமத் ராமாயணம் நடு நாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீ சீதாராமருக்கு பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஸ்ரீ ஆஞ்சநேய மகாப்பிரபு!
ஹனுமத் ஜயந்தி சிறப்பு
ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களிலெல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய் – பக்தருள் பக்தராய் அமர்ந்து உபந்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சகல சந்தோஷங்களை வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால்தான் துளஸிதாஸர் ஸ்ரீ ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதக்ஷணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளியிருப்பார் என்பது அவருக்குத் தெரியும்!
ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடை மாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணை சாத்தி ஆராதிக்க வேண்டும். வாலில் குங்குமப் பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். இப்படி கண்ணனும் மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால்தான், வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். குங்குமப் பொட்டு வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பரியம் என்னவென்றால் அனுமாருக்கு வாலில்தான் சக்தி அதிகம்.
பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்திலிருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வால் முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும். காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வரவேண்டும்.