மாட்டுப் பொங்கல் சிறப்பு | mattu pongal tamil
மாட்டுப் பொங்கல்
பொங்கல் தினத்தின் மறுநாள் கொண்டாடப்படுவது இப்பொங்கல். இது கோபூஜை, பட்டிப் பொங்கல், கன்றுப் பொங்கலெனவும் வழங்கப்படும். பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும், எல்லாக் கிரியைகளும் முடிந்த பின்னர் பசுவை வணங்கி அதனை பூஜித்து உணவை. உண்ண வேண்டுமெனக் சாஸ்திரங்கள் கூறுகின்றன. வருடத்தில் ஒரு நாளாவது கோபூஜை செய்தல் வேண்டும்.
பாற்கடலிலிருந்து காமதேனு தோன்றினாள். அவளுடைய ஸந்ததி இருக்கும் லோகம் “கோ” லோகம் எனப்படும். ராதா கிருஷ்ணர் அங்கு கோக்களுடனும் கோபிகைகளுடனும் ஆனந்தமாக வசிக்கின்றார். அந்த கோக்களின் பாலினாலும் நெய்யினாலும் வேதமந்திரத்தைக் கூறி யாகம் செய்கின்றனர். யாகத்தினால் மழை, மழையால் உலக க்ஷேமம் உண்டாகிறது.
அதுவும் உத்தராயண புண்ணியகால ஆரம்பத்தில் செய்வது உத்தமமென்பதாலேயே மறுநாள் இதனைக் கொண்டாடி வருகின்றனர். உழவர்களுடைய உழைப்புக்கும் உவகைக்கும் உறுதுணையாக இருந்த மாடு கன்றுகளையும் கூட அவர்கள் மறந்து விடுவதில்லை. அவர்களுக்குப் பெருந்துணையாக இருந்த அவற்றுக்காக ஒரு நாளைத் தனியாக ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். அந்த நாளை அவர்கள் மிகவும் குதூகலமாகக் கொண்டாடுகின்றார்கள்.
மாட்டுப் பொங்கலன்று உழவர்கள் மாடுகளை மிகவும் விசேஷமாகப் போஷிக்கின்றார்கள். அவற்றின் கொம்புகளையும் சீவிச் சுத்தப்படுத்துவர், நன்கு தேய்த்துக் குளிப்பாட்டுவர், மஞ்சள், சந்தனம், குங்குமம் முதலான மங்கலப் பொருள் அணிவித்து பூஜித்து மகிழ்வர். பின்னர் சுத்தம் செய்யப்பட்ட மாட்டுத் தொழுவத்திலே அவற்றைக் கொண்டு சேர்ப்பர். அங்கு பொங்கல் பொங்குவர். பொங்கிய பொங்கலை மாடுகளைப் புசிக்கச் செய்வர். காளையை கட்டும் ஜல்லிக்கட்டு திருவிழா என்றும் ஒரு விழா உண்டு. இன்றும் இம்முறை பல இடங்களில் நடந்து வருகின்றது.
கோமாதா
பகவானுடைய அபிஷேகத்திற்கு பால் முதலியவைகளும் பசுக்களிடமிருந்து கிடைக்கின்றன. உயிருக்கும் உபயோகமான பசுவைப் போல் உதவுகிறவள் தாய் ஒருத்தியே! ஆதலால் கோமாதா எனப்படுகிறாள்.