உமாமகேஸ்வர விரதம் | uma maheswara viratham in tamil
உமாமகேஸ்வர விரதம்
இவ்விரதம் கார்த்திகை மாதப் பௌர்னமி தினத்தில் அனுஷ்டிக்கப்படுவது. உமாமகேச்சுர மூர்த்தம் மிகவும் மேலான மூரித்தமாகும். இருபத்தைத்து விக்கிரக பேதமாகிக் கிருந்திய பேதங்களுள் ஒன்றாகியும் உமையோடு கூடிய மூர்த்தமாகும்.
உமாமகேஸ்வர விரத முறை
நித்திய கருமங்களை முடித்துக் குறிப்பிட்ட ஓர் இடத்தைச் சுத்தம் செய்து கும்பம் வைத்துப் பொன்னாலேனும், வெள்ளியாலேனும் செய்த உமை, சிவன் திருவருவங்களை (மூர்த்த பிம்பங்களைப் பஞ்சகவ்வியத்தினால் அபிஷேகம் செய்து, புதிய வஸ்திரமசணிவித்து திருவமுது படைத்துத் தீபதூபம் காட்டி, மனமுருக வணங்குதல் வேண்டும். பின்னர்ச் சிவாலயமடைந்து, தன் மனதில் கருதிய ஒரு பொருளை விரும்பித் தோத்திரம் செய்து, ஒரு பொழுதுண்ணால் வேண்டும். மறுநாள் உதயத்தில் முன்னாள் ஸ்தாபித்த கும்பத்தையும் பிம்பத்தையும் முன்போல வாங்கி, அந்தணருக்கு அவற்றைத் தானமாகக் கொடுத்து, அடியார்களுடன் திருவமுது செய்தல் வேண்டும். வருடந்தோறும் இந்த நோன்பியற்றுவோர் இம்மையில் சகல செல்வங்களும் பொருந்தப்பெற்று மறுமையில் முக்தியுமடைவர்.
உமாமகேஸ்வர விரத பயன்
திருணபிந்து என்றொரு முனிவர் கண்பார்வை குன்றி நீண்ட காலம் வருந்தினார். இவ்விரத மகிமையை அறிந்து அனுஷ்டித்துப் பார்வை பெற்றார். கிருஷ்ணன் பதினாறாயிரம் தேவியரை அடைந்து; ஒன்பது கோடி பேரைப் பெற்று உலகாண்டு சிறப்புற்றான். பிரம்மன் காயத்திரி, சரசுவதி, சாவித்திரி இவர்களை மனைவிமாராகப் பெற்றுச் சிறப்படைந்தான், இந்திரன், சயந்தனை மகனாகப் பெற்றான். வசிட்டர் தெய்வீகமுடைய காமதேனுவைப் பெற்று உயர்வடைந்தார். மிதிலையரசன் சீதையைப் புத்திரியாகப் பெற்றான். சித்திரசேனன் என்றொருவன் ஊர்வசியை மனையாளாகப் பெற்றான். சுதன்மா என்றொரு வேதியன், தான் படித்தறிய வேண்டிய வேதபாராயணத்தில் மனமின்றி நெடுநாள் வீனோ கழித்தனன். இவ்விரத முறையைக் கேள்வியுற்று அனுஷ்டித்தான். அதனால் அருங்கலை வல்லவனானான். இந்துசேனன் என்றொரு மன்னன் பகைவர்க்குத் தோற்றுக் காட்டையடைந்து, காய்கனிகளை புசித்து காலம் கழித்தான். அகத்திய முனிவர் அவ்வனத்தை அடைந்தபோது தன் குறைகளை முறையிட்டான். அவர் இவ்விரதமுறையை அவனுக்குரைத்து அனுஷ்டிக்கும்படி கூறினார். அதனை அவன் அனுஷ்டித்தான். சிவபெருமான் குபேரன் மூலம் அவனுக்கு வேண்டிய யாவையும் அருளினார். அவ்விந்துசேனன் பகைவரைப் புறங்கண்டு, நீண்ட காலம் ஆட்சிபுரிந்து விண்ணுலகடைந்தான்.