பக்தி பாடல்கள்விநாயகர் பாடல்கள்

விநாயகர் துதிகள் | Vinayagar thuthi in Tamil – part 2

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

 

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை 
வருத்த எண்ணுகின்ற மலம்!

 

நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே, 
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா, 
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே! 

 மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

 

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

 

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

 

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து

என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும் 
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே! 
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே! 
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

 

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

 

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை 
முக்கட் கடாயானை முன்!

 

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *