நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி சிறப்பு , வரலாறு
நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி சிறப்பு
ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியில் நாக சதுர்த்தியும், ஐந்தாம் நாளாகிய பஞ்சமியில் கருட பஞ்சமியும் வரும், இதற்கு ஒரு கதை கூறுவார்கள்.
நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி வரலாறு
ஒரு பெண்ணின் ஐந்து சகோதரர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் சமயம் நாகப்பாம்பு கடித்து இறந்து விடுகின்றனர்; அவர்களை உயிர்ப்பித்துத் தரும்படி அந்தப் பெண் நாகராஜனை வேண்டிப் பூஜை செய்தாள், அந்த நாள் நாக சதுர்த்தி, இறந்தவர்களுக்கு உயிர்ப்பிச்சை வேண்டி கருடனை நோக்கி செய்த பூஜை கருட பஞ்சமி,உடன் பிறந்த சகோதரிகள், தங்கள் சகோதரர்களின் க்ஷேமத்தைக் கோரி இதைக் கொண்டாடுவதாக ஐதீகம்.
நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி பூஜை
இப்பண்டிகை தென்னிந்தியாவில் சில பிரிவினர் மட்டுமே கொண்டாடுகின்றனர். வடஇந்தியாவில் சதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜை செய்து, பாம்பு புற்றுக்குப் பால் வார்ப்பார்கள். அன்று சகோதரிகள், வீட்டில் ஏதாவது ஒரு உலோகத்தில் செய்த நாகத்தை வைத்து பூஜை செய்து நோன்புச் சரடை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். (ஒரு மஞ்சள் சர்ட்டில் நடுவில் புஷ்பம் சுட்டி பூஜையில் வைத்து அதைக் கட்டிக் கொள்ள வேண்டும்) புற்றுக்குச் சென்று பால் விட வசதியில்லாதவர்கள் பூஜை செய்யும் நாகத்திற்கே பால் அபிஷேகம் செய்ய வேண்டும். வீட்டில் பூஜை செய்தபின் அருகில் உள்ள பாம்புப் புற்றுக்குச் சென்று பால்விட்டு வெற்றிலை, பாக்கு பழம் நிவேதனம் செய்து கற்பூரம் ஏற்றிவிட்டு வரும்பொழுது சிறிது புற்று மண் எடுத்து வரவேண்டும். வீட்டிற்கு வந்ததும் வாயிற்படியின் இரண்டு பக்கத்திலும், மஞ்சள் பூசி குங்குமத்தால் மேலே தலை, கீழே வால் இருக்கும்படி வரைந்து கற்பூரம் ஏற்றி நமஸ்கரித்துவிட்டு உள்ளே செல்ல வேண்டும். எடுத்து வந்துள்ள புற்று மண்ணுடன் சிறிது அட்சதை சேர்த்து, சகோதார்கள் வெளியூரில் இருந்தால் கவரில் வைத்துத் தபாலில் அனுப்பவேண்டும். அருகில் இருந்தால் புற்றுமண், அட்சதையை அவர்கள் தலையில் போட்டு சகோதரர்கள் பெரியவர்களாய் இருந்தால் நமஸ்காரம் செய்ய வேண்டும். சிறிய சகோதரனாய் இருந்தால் ஆசிர்வாதம் செய்ய வேண்டும். அதற்கு பதியாக சகோதரர்கள் தங்கள் சக்திக்கு தக்கபடி ஏதாவது தட்சிணையைத் தாம்பூலத்துடன் கொடுப்பார்கள்.
ரக்ஷா பந்தன்
இதே மாதிரி வட இந்தியாவிலும் “ராக்கி” அல்லது “ரக்ஷா பந்தன்” என்று கொண்டாடுகிறார்கள். சகோதரனுக்கு வலது கையில் ரக்ஷை மாதிரி சரிகையில் செய்து கட்டி தங்கள் அன்பை தெரிவித்து கொள்கிறார்கள். சகோதரன் இல்லாதவர்கள் கூட தம் சினேகிதர்களுக்கும், உறவினர்களுக்கும் ராக்கி பந்தன் என்று கட்டுவார்கள்.