மாதங்களில் சிறந்த மாதம் மார்கழி மாதம்.
மார்கழி மாதம்
இதை தனுர் மாதம் என்றும் கூறுவார்கள். இம்மாதம் அதிகாலையில் நீராடி, பூஜை செய்தால் ஒரு வருடத்தில் பூஜை செய்த பலனைத் தரும் என்பார்கள். அதிகாலையில் பஜனை செய்து கொண்டு வீதிவலம் வருவார்கள். ஆண்டாள் இம்மாதம் பகவானைக் குறித்து பாவை நோன்பு இருந்தது பிரசித்தம்.
மார்கழி மாத சிறப்பு
இம் மார்கழி மாதத்தில் பல வைஷ்ணவ ஆச்சாரியர்களும் பெரியார்களும், மாமன்னர்களும் தோன்றியுள்ளனர். இம்மாதத்தைச் சிறப்பித்துக் கொண்டாடுவதை மக்கள் பழக்கமாகக் கொள்ளலாயினர். இம்மாதத்தில் ஆண்களும், பெண்களும் திருப்பாவை திருவெம்பாவை மற்றும் தோத்திரப் பாடல்களையும் பாடிப் பரவசமுறுவர்.
ஸ்ரீ வைஷ்ணவ ஆலயங்களில் இராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யப்படும்.
“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார் பாடிக் கொடுத்த மணிமாலையாம் திருப்பாவை” கண்ணானுக்கு மணமாலையாக விளங்குவதுபோல் அடியார்களுக்கும் மனதை தெளிவு படுத்தும் அருட் பாமாலையாகவும் விளங்கலானது.
அதுபோலவே மாணிக்கவாசகப் பெருமான் இயற்றிய திருவாசகத்தின் நடு நாயகமாக விளங்கும் திருவெம்பாவையும், திருசடைப் பெருமானின் தண்டைச் சிலம்பணிந்த சேவடி
கமலங்களைப் போற்றி புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. அத்தெய்வீகப் பாடல்கள், நம் சிந்தையையும் செயலையும் செம்மைப்படுத்துகிறது.
மார்கழி மாத நோன்பு
இம்மாதத்தில் பல வகையான நோன்புகளை பெண்கள் நோற்கின்றனர். அதன் பலனாக அவர்கட்கு நல்ல கணவன்மார் அமைகின்றனர். இதனைப் ‘பாவை நோன்பு” என்றும் கூறுவர். மார்கழி 27-ஆம் நாள் எம்பெருமானுக்கு நெய் வழிய வழிய சர்க்கரை பொங்கல் செய்து நிவேதிப்பதனை “கூடார வல்லி” என்று வைஷ்ணவர்கள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடுகின்றனர்.
இதன் உண்மை தத்துவத்தை “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்ற பாட்டால் பாவை ஆண்டாள் நமக்கு அழகுற மொழிகின்றாள். மார்கழி மாதத்தில் மதி மறைந்த நன்நாள் மூல நக்ஷத்ரம் கூடிய சுபதினத்தில் ஆஞ்ச நேயருடைய ஜயந்தி கொண்டாடப்படுகிறது.
மங்களகரமான மார்கழி
இத்தகைய மங்களகரமான மார்கழி மாதத்தில் வைகறைத் துயிலெழுந்து, பகவானைத் துதி செய்வதால் மற்ற எல்லா மாதங்களிலும் பகவானைப் பூஜித்த பலனைப் பெறுகின்றோம். இந்த மாதத்தில் அனைத்து சிவ வைஷ்ணவ ஆலயங்களில் அதிகாலையில் திருமஞ்சனம் நடைபெறும். பெண்கள் அதிகாலையில் பல வண்ணங்களில் தெருவில் கோலம் போடுவார்கள். அதில் அரிசிமாவினால் போடுவது மிகவும் அவசியம், எறும்பு போன்ற சிறுஜீவன்களுக்கு அது உணவாக அமைகின்றது.
மார்கழி மாதத்தில் அதிகாலையில் மனிதனுக்கு மிகஅவசியமான ஓசோன் வாயு மிக அதிக அளவில் பரவி இருக்கும் அதை சுவாசித்தல் நுரையீரலுக்கு மிகவும் நல்லது ஆகவேதான் இந்த மாதத்தில் அதிகாலையில் கோலமிடுதல், பஜனை செய்தல் ஆலயம் செல்லுதல் முதலியவைகளை ஏற்படுத்தியுள்ளதாக அறிவியலாளர் தெரிவிக்கின்றனர்.