தர்ப்பணம், சிரார்த்தம் பற்றிய தகவல்கள் | srardham in tamil
மஹாளயம் சிரார்த்தம் சிறப்பு
மஹாளயம் என்பது புரட்டாசி மாதத்திலே செய்யப்படும் ஒரு பொது சிரார்த்தம், இறந்தோருக்கு செய்யும் கிரியை இது பிதிர் தேவதைகளுக்குடைய திருப்தியின் பொருட்டு செய்யப்படும் பிண்ட கருமம், சுப கருமத்தின் கண்ணும் அசுபக் கருமத்தின் கண்ணும் செய்யப்படும் ஸ்ரார்தம் சாந்தி என்றும் அப்பியுதம் என்றும் சொல்லப்படும், பிரேத திருப்தியின் பொருட்டு செய்யப்படுவது பிரேதஸ்ரார்தம் எனப்படும். சூரியனின் தென்பாகத்து நடுப்பாகம் புரட்டாசி மாதத்தில் பூமிக்கு நேரே நிற்கின்றது. அப்போது சந்திரனது தென்பாகமும் நேராக நிற்கின்றது அத்தருணம் பிதிர்கருமங்களுக்கு விசேஷமான காலமாகும்.
சிரார்த்தம் உரிய தலங்கள்
சிரார்த்த கருமங்களுக்குரிய சிறந்த தலங்கள் காசி, கயை, பிரயாகை, குருஷேத்திரம், கோகர்ணம், குரு ஜாங்கலம், புட்கலக்ஷேத்திரம் முதலியனவாகும். இவற்றுள் கயா சிராத்தம் மிக விசேடமுடையது. இறந்த தினம், அமாவாசை, மாளய பட்ச காலம் என்பன சிரார்த்தம் உரிய காலமாகும்.
பிதிர்களுக்கு உரிய காலம்
தேவர்கள் வருடக் கணக்கின்படி புரட்டாசி மாதம் நடுராத்திரியாகும். நடுராத்திரி காலம் நிசப்தமாயிருக்கும். தேவர்கள் ஆராதனைக்கும், பிதிர்களுக்கு உபசாரத்திற்கும் அக்காலமே உரியது சிறந்ததுமாகும். சாத்திரங்களும் நூல் முறைகளும் கூறுவன அதுவேயாகும். எனவே, அக்காலத்தி பிதிரர்களுக்குத் தர்ப்பணம் செய்து பிரீதி செய்ய வேண்டியது அவசியமாகும். ஒரு சிலர் கயாவில் தர்ப்பணம் செய்து விட்டால் பிதிரர்கள் சாந்தமடைந்து விடுவார்கள் பின்னர் எள் தொடவேண்டியதில்லை என்பது தவறான கருத்து. பிரதி மாதம் அமாவாசையன்ரு பிதிர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது சாத்திரம். இறந்தவர்களுக்குச் செய்யும் பிதிர் தர்ப்பணத்தால் அவரவர்களுக்குரிய பலன்களை அவர்கள் அவரவரிடத்தில் கொண்டு சேர்ப்பார். ஆதலின் அக்காலத்தில் உபவாசமிருந்து, பிதிர் தர்ப்பணம் செய்து, இயன்றவரை சாதுக்கள் அடியார்களுக்கு அமுது செய்வித்தல் வேண்டும் அங்கனம் செய்தல் பிதிரர்களுக்குப் பிரீதியளிக்கும்.