கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை
கேதார கௌரி விரதம்
கேதாரேசுவரரான சிவபெருமானைக் குறிந்து, பிராட்டியார் விரதம் அனுஷ்டித்ததால் இந்த விரதத்திற்கு கேதார கௌரீ விரதம் என்று பெயர் ஏற்பட்டது. சிலனும் சக்தியும் ஒன்றென்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் ஓர் ஒப்பற்ற விரதம்தான் இந்த கேதார கௌரி விரதம், புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமியன்று தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷ்ம் தீபாவளிஅமாவாசை வரை விரதமிருந்து முடிக்க வேண்டிய பண்டிகை இது. இவ்விரதம் தோன்றியதற்கான புராண வரலாற்றை காண்போம்.
கேதார கௌரி விரதம் வரலாறு
பிருங்கி முனிவர் என்பவர் பெரும் சிவபக்தர். இவர் சிவனைத் தவிர வேறு எத்தெய்வத்தையும் சிந்தையிற் கொள்வதில்லை, தியானிப்பதுமில்லை. இவர் சக்தியைக் கூடத் தொழுவதில்லை. முனிவரின் செயலைக் கண்ட சங்கரி சினங்கொண்டாள். அம்பிகையின் கோபாக்கினிக்குப் பலியான முனிவர் கால்களின் சக்தியை இழந்தார். “இனிமேல் சிவனை வணங்குவோர் தம்மையும் சேர்த்து வணங்க வேண்டும். தான் வேறு சிவன் வேறு அல்ல, சிவனும் தானும் ஒன்றே” என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டாள்.
அம்பிகை அரனார் அடிமலர் தொழுது கயிலையை விட்டகன்றாள். கௌரிதேவி, கௌதம முனிவருடைய தபோவனத்தை வந்தடைந்தாள். கௌரிதேவியை கௌதமர் வணங்கி வரவேற்றார். கௌதமரின் பக்திக்கு திருவுள்ளம் கனிந்த கௌரி, பிருங்கி முனிவரால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பற்றி கூறினாள். கௌதமமுனிவர், கௌரி தேவிக்கு அரிய விரதம் ஒன்றை அனுஷ்டிக்குமாறு வேண்டிக்கொண்டார். அந்த விரத மகிமையால் தேவியின் எண்ணம் ஈடேறும் என்று கூறினார். அனுஷ்டான விதிமுறைகளையும் விளக்கிச் சொன்னார், கௌரி, முனிவர் சொன்ன பிரகாரம் விரதத்தை அனுஷ்டிக்கத் தொடங்கினாள்.
விரதம் பூர்த்தி அடைந்த நந்நாளன்று, நாள் மறை போற்றும் நாயகன் – வேத முதல்வன், விமலர் கௌரியின் முன்னால் உடம்பின் இட பாகத்தைத் தேவிக்குத் தந்தார் ஈசன்! சூலமும் மழுவும் தாங்கப் பெற்ற திருக்கரத்துடன் காட்சி அளித்தார். பகவானின் பாதங்களைப் பணிந்து தொழுது பொன்வண்ண மலர்களால் அர்ச்சித்தாள்.
பார்வதி தேவி, இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் போது சித்ராங்கதன் என்னும் கந்தர்வன் தேவியிடம், “தேவி! பூவுலகம் தோறும் இந்த விரதத்தை மக்கள் அனுஷ்டித்து சர்வ மங்கலங்களையும் பெறுவதற்கு அருள் பாலிக்க வேண்டும்” என்று பிரார்த்தித்தான், பார்வதி தேவியும் அவ்வாறே அருள் செய்தாள். இதுபோல் இவ்விரத வரலாறுகளைப் பற்றிய விளக்கங்களைச் சொல்லும் பல புராணக் கதைகள் உள்ளன.
அர்த்தநாரீசுவரர்
விரதத்தின் மகிமையால், கௌரியின் விருப்பம்போல் தனது உடம்பின் இட பாகத்தைத் தேவிக்குந் தந்தார் ஈசன்! அதுவே அர்த்தநாரீசுவரர் என்னும் சிவசக்தி சொரூபத்தின் அருள் வடிவமான திருத்தோற்றம்.
கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை
முதலில் பூரண பொற்கும்ப கலசம் வைத்து எம்பெருமானை ஆவாஹனம் செய்யவேண்டும். பிறகு இருபத்தொரு இழையையுடைய நூலை ஒன்றாக முறுக்கி கொள்ளவேண்டும். தினமும் பூரணகும்ப பூஜையின் போது நூலில் முடிசு ஒன்று போட வேண்டும். இவ்வாறு இருபத்தோரு நாள் பூஜை புரிந்து இருபத்தோரு முடிச்சுகளைப் போடவேண்டும். இருபத்தோராவது நாள் தீபாவளி வரும். அன்றைய தினம் இருபத்தோராவது முடிபோட்டு நூலை காப்பாகக் கட்டி, விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். கலசத்தைப் பூஜிப்பது போல அம்மியையும், குழவியையும் அலங்கரித்து, அம்மி மீது குழலியை நிற்கும்படி செய்து ஆவுடை மீது லிங்கம் இருப்பது போல காட்சி தரும் சிவலிங்க மூர்த்தியை நிறுவ வேண்டும். அதன் மீது கேதாரீஸ்வரரை ஆவாஹனம் செய்து பூஜையை மேற்கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும்.
இருபத்தொரு நாட்கள் விரதத்தை அனுஷ்டிக்க இயலாதவர்கள் இறுதி நாளன்று மட்டும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம். இருபத்தோரு பழங்கள் – பக்ஷணங்கள் செய்து எம்பெருமானுக்கு நிவேதித்து, வில்வத்தால் அர்ச்சித்து தூப்ப தீப நெய்வேத்தியங்கள் செய்ய வேண்டும். தீபங்களால் ஆராதித்து இருபத்தோரு பேருக்கு அமுதமளித்து இந்த விரதத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
கேதார கௌரி விரதம் பலன்
இவ்விரதத்தை ஆண்டுதோறும் அனுஷ்டிப்பதால் கணவன் மனைவி இருவரிடையே ஒற்றுமையும், குதூகலமும், க்ஷேமங்களும் உண்டாகும்.